கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீது துன்புறுத்தல்-மன்னிப்பு கோரினார் போப் ஃபிரான்சிஸ்!

கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.ஆறு நாட்கள் பயணமாக கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், நேற்று (திங்கட்கிழமை) முதல் நிகழ்வாக அல்பர்டாவில் எட்மான்டனின் தெற்கு பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க தேவாலய பாடசாலையில் குழுமியிருந்த பூர்வகுடி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றினார். இதன்போதே அவர் மன்னிப்பு கோரினார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘பூர்வகுடி மக்களுக்கு ஏராளமான கிறிஸ்தவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மிகுந்த தாழ்மையுடன் மன்னிப்பு கோருகிறேன்.இந்தப் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடூரம். இதுபோன்ற மிகப் பெரிய கொடூரங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு பொருந்தாதவை என்பதையே கிறிஸ்தவ மத நம்பிக்கை நமக்கு எடுத்துரைக்கிறது’ என கூறினார்.

கனடாவில் 1900ஆம் ஆண்டுமுதல் 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தேவாலயப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர்.

பழங்குடியினரிடையே மதத்தையும், தங்களுடைய கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கையை அன்றைய அரசுகள் மேற்கொண்டன. அப்போது கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இந்தக் குற்றச்சாட்டுகளை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொண்டது. பாடசாலைகளில் பழங்குடியின மாணவர்கள் தாய்மொழியில் பேசியதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் மாணவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை கனடா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இதற்கு, தற்போதைய கத்தோலிக்க போப் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையிலேயே அவர் நேற்று மன்னிப்பு கோரினார்.