’பொன்னியின் செல்வன்’ வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல்!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவே படத்தின் பிரமாண்டத்தை ரசிகர்களுக்கு வெளிக்காட்டியது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என ஒவ்வொரு அங்கமும் வெளியாகி ட்ரெண்டானது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 திரையரங்குகளில் வெளியானது. தியேட்டர் வளாகத்தில் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடித் தீர்த்தனர். படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பான்மையானோர் நேர்மறையான விமர்சனங்களைக் கூறி வருவதால் படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26 கோடியும், இந்தியா முழுவதும் ரூ.42 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியான வரலாற்றுத் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’, இன்னும் அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.