சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்


வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழி மறித்த போக்குவரத்து காவல்துறையினர் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

சாந்தனின் உடல் இன்று(3) காலை வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது. இதன்போது உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தினுள் உள்நுழைந்தது.

அங்கு கடமையில் இருந்த காவல்துறையினர் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறினர்.

அதன் சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தனர். இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளது.