யாழில் சட்டத்தரணியின் அலுவலகத்தில் திடீர் சோதனை: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (Jaffna) - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இத்தாலியைச் (Italy) சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

இந்தநிலையில், வெளிநாட்டுப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரின்  விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்தது.

மேலும், இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் காவல்துறையினர்  அனுமதி பெற்றதையடுத்தே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.