அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொலான்ட் டிரம்பை படுகொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியை ஈரான் மறுத்துள்ளது.
குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தாக்குவதற்கு சதி செய்ததாக சுமத்தப்படும் கொடிய குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நாசர் கனானி நேற்று தெரிவித்தார். எவ்வாறாயினும் 2020 ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை படுகொலை செய்வதற்கு உத்தரவிட்டதற்காக டிரம்புக்கு எதிராக ஈரான் வழக்குத் தொடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானிடம் இருந்து டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அண்மையில் அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரியவந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என். நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இரகசிய சேவை, டிரம்பின் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் இடம்பெற்ற டிரம்ப் மீதான படுகொலை முயற்சிக்கு ஈரானுக்கு தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 வயதான துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் தாக்குதலை தனியாகச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.