சிறிலங்காவில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது தவறாம் - வலுக்கும் எதிர்ப்பு


தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது தவறாகும் எனவும் தான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துவதாவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் ஆரம்ப விழாவில் உமாரா சின்ஹவன்ச, தேசிய கீதத்தைப் பாடும் போது ஒரு முக்கியமான வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.

அவர் ‘நமோ நமோ மாதா’ என்பதற்குப் பதிலாக ‘நமோ நமோ மாஹதா’ என்று மீண்டும் மீண்டும் பாடுவது பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என காமினி லொகுகே கூறியுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு நாட்டின் தேசிய கீதமும் அந்நாட்டின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதை யாரும் சிதைக்க முடியாது.

எனவே, தேசிய கீதம் சிதைக்கப்படும் இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்க முடியாது என புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.