கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகுமா..!

  


கதிர்காம புண்ணிய பூமியில் புண்ணியங்களைத்தேடி காசிக்கு போன கதையாய் ஒரு இராஜாங்க அமைச்சர் போனதாய் ஒரு கதை. மறுபக்கம் தமிழர் மரபுரிமையை காக்க புறப்பட்டதாய் இன்னுமொரு கதை.

எது எப்படியானாலும் இருக்கட்டும். நீங்களும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒரு மனிதர் என சொல்லிக்கொள்கிறார்கள்.  ஆதலால் உங்கள் பயணம் உங்களுக்கான புண்ணியம் தேடியதாக, உங்களுடன் இருந்து கைதூக்கிய, உங்களுக்கு பலமாய் உங்கள் செயல்களையும் திட்டங்களையும் நிறைவேற்றியவர்களுக்கு புண்ணியமாய் வந்து சேரட்டும்.

உங்களை நம்பி 50,000 க்கும் அதிக வாக்குகளை வாரி வழங்கியதாக நீங்கள் சொல்லிக்கொள்ளும் மட்டக்களப்பு மக்களுக்கும் புண்ணியமாய் வந்து சேரட்டும்.

கருணாவின் தலைமறைவுக்கு பின்னால் உங்களை அரவணைத்து செல்லப்பிள்ளையாக வளர்த்து பதவிகள் தந்து, ராஜபோகம் அளித்து உங்களைக்கொண்டு கிழக்கில் நிறையவே அரங்கேற்றிய அந்த ராஜபக்‌ஷ குடும்பத்துக்கும் கூட புண்ணியமாய் சேரட்டும்.

எல்லாருக்கும் கேட்டதையெல்லாம் கொடுக்குறாராம் கதிர்காம கந்தன். உங்களுக்கும் நிறையவே தரக்கூடும்.

அதிக தமிழ் மக்களைக் கொண்(ன்ற)ட மக்கள் பிரதிநிதியல்லவா நீங்கள். அவனும் தமிழர் கடவுள் தானே. அவனுக்கும் கடன்கள் நிறையவே இருக்கும்.

ஆனால், அந்த முருகனை பார்த்த மாத்திரம் என்ன கேட்டீர்களோ தெரியாது. உங்களால் உங்கள் ஆட்களால் இல்லாமல் ஆக்கப்பட்டதாக சொல்லப்படும் வர்சாவுக்காகவும் தினூசிகாவுக்காவும் ஒருமுறை வேண்டிக் கொள்ளுங்கள். பாவம் உலகம் அறியாத அப்பாவி பிஞ்சுகளின் ஆத்துமாவுக்கு ஒரு நீதியை வேண்டிக்கொள்ளுங்கள் - புண்ணியமாய் போகும்.

6 வயது சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்?

அதுபோல எழுத்துகளில் நேர்மை இருந்ததாம் என்று மட்டக்களப்பில் வீதியில் சுட்டுப்போட்ட ( நீங்கள் தானாம் என்று சொல்லகிறார்கள் ) நாட்டுப்பற்றாளர் நடேசனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அவரின் கைம்பெண்ணாய் நிற்கும் மனைவிக்காக தந்தையை இழந்த மக்களிற்காக வேண்டிக்கொள்ளுங்கள் - புண்ணியமாய் போகும்.

பாவங்கள் தீர்க்க, பாவிகள் நிறைந்த உலகில் பாலன் பிறந்தாராம். அந்தப் பிறப்பின் கருணையை கொண்டாட தயாரான போது தேவாலயத்திலேயே தீர்த்துக்கட்டிய ( அதுவும் நீங்கள் தானாம் என்று சொல்கிறார்கள் ) மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்காகவும் கொஞ்சம் வேண்டிக்கொள்ளுங்கள்.

உங்கள் நலனுக்காக நீங்களாகவே விதைத்து முடித்ததாய் சொல்லப்படும் பிரதேசவாத விதையை பல்கலையில் வளரவிடவில்லையென்று ( அதுவும் நீங்களாம் என்று சொல்கிறார்கள் ) சுட்டுக்கொன்ற பேராசிரியர் தம்பையாவுக்காக ஒருதடவை வேண்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்தீர்களோ இல்லையோ இறந்தவர்கள் ஆசிர்வாதம் உங்கள் அரசியல் ஆசைக்கும் வாழ்வுக்கும் நல்ல பலன்களை தந்துவிடலாம்.

எதுக்கும் கும்பிட்டுக்கொள்ளுங்கள் நீங்கள் கொன்றதாய் கடத்தியதாய் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும்.

நல்லதே நடக்கட்டும் முருகன் அருள் நிறையவே கிடைக்கட்டும். கதிர்காம முருகன் கருணை கொண்டவனாம். உங்களிடம் கடந்த காலங்களில் வற்றிப்போனதாய் சொன்னார்கள் கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்களேன்.

“செய்த பாவம் தன்னை எப்படி தொலைப்பது. காட்டிக் கொடுத்த பாவம் - ராஜபக்ச குடும்பத்துக்கு கூட்டிக் கொடுத்த பாவம். யோசப்பை போட்ட பாவம். பல படுகொலைகள் செய்த பாவம். முருகன் தமிழ் கடவுள். கிட்ட போகாத வேலாலேயே குத்திப் போடுவார்”

என விமர்சித்து வருகின்றனர் சமூக ஊடக பயனர்கள்.