கை விலங்குடன் வந்து இடத்தை காட்டிய பிள்ளையானின் சகா 'யூட்" : ரவீந்திரநாத், எக்னெலி கொட, பார்த்தீபனின் ஆகியோர் புதைக்கப்பட்டதாக சந்தேகம்


 


பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எக்னெலி கொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை ஒன்று நேற்று வியாழக்கிழமை சிஜடியினரால் அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற நிலையில் அங்கிருந்துஎந்தவொரு மனித எச்சங்களும் மீட்கப்படவில்லை.

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் 2007 ஆம் ஆண்டு 6 மாதம் 28 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பிமனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010 ஜனவரி 26ஆம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலி கொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சி.ஐ.டி. யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்றுபுதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர்.
இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி. யினர் அனுமதி கோரியதையடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ் கண்ணா அடையாளம் காண்பிக்கும் இடத்தை பெக்கோ இயந்திரம் கொண்டு நேற்று வியாழக்கிழமை பிற்பல் 2. மணிக்கு தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை அந்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

எனினும் மாலை வரை தோண்டும் பணி இடம்பெற்ற போதும் மனித எச்சங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் தோண்டும் பணியை நீதிபதி நிறுத்த உத்தரவிட்டார். அதேவேளை விநாயகபுரம்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மயானத்தை தோண்டுவதற்கான திகதியை நீதிபதி பின்னர் அறிவிக்கவுள்ளார்.