தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், பிள்ளையான் தற்போது கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபடுத்திய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்றையதினம் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையிலேயே கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் சிலர் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.