ரணிலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது பிள்ளையானின் மிரட்டல் விவகாரங்கள்

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் விடுத்துவருகின்ற சில மிரட்டல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்போவதாக கிழக்குமாகான புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிள்ளையான் தன்னை மிரட்டியதாக மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேபோன்று ஒரு சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள ஒரு சமூகச் செயற்பாட்டாளரது காலை உடைக்கப்போவதாகவும் பிள்ளையான மிரட்டல் விடுத்திருந்தார்.

இதேபோன்று அண்மைக்காலமாக பிள்ளையான் பலருக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், அரசியல் அதிகாரங்களை வைத்துக்கொண்டு 'ரவுடிகள்' போன்று நடந்துகொள்ளும் பிள்ளையானின் செயலை மனித உரிமைகள் அமைப்புக்கள், சர்வதேச சமூகம் மற்றும் சிறிலங்கா ஜனாதிபதி போன்றவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல இருப்பதாகவும் மட்டக்களப்பு புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பின் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் பலரது படுகொலைகளின் பின்னணியில் பிள்ளையான் இருந்ததான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையானின் மீது இருக்கின்றன.

திருகோணமலை 'செயின்ட் மேரிஸ்' கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவி யூட் ரெஜி வர்ஷா என்ற ஆறு வயதுச் சிறுமி 11.03.2009 அன்று பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டு, சிறுமியின் உயிருக்கு 30 மில்லியன் கப்பம் கேட்கப்பட்ட நிலையில் 13ம் திகதி அவளது உடல் உரப்பைக்குள் கட்டப்பட்டு வீதியோரம் வீப்பட்டிருந்த சம்பவம்,

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட்ட வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருந்த தினூசிகா சதீஷ்குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி 28.04.2009 அன்று கடத்தப்பட்டு 3 கோடி ரூபாய் கப்பம் கேட்கப்பட்ட நிலையில், அவளது உடல் 02.05.2009 அன்று ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உட்பட ஏராளமாக கடத்தல்கள், கப்பம் கேட்ட சம்பவங்கள், படுகொலைகள்,  வங்கிக்கொள்ளை போன்றனவற்றுடன் தொடர்புபட்டு பிள்ளையானின் பெயர் அடிபட்டு மக்கள் மத்தியில் அச்சத்துடன் பார்க்கப்பட்டுவந்த ஒரு நபர்தான் பிள்ளையான்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட பிள்ளையான தலைமையிலான ரீ.எம்ம.வி.பி. அமைப்பின் படுகொலைகள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்துள்ளன.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் பிள்ளையான சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்து சிறிது காலம் அமைதிகாத்த பிள்ளையான் மீண்டும் தனது அடாவடித்தனங்களை, மிரட்டல்கள் மூலம் ஆரம்பித்துவிட்டாரோ என்று தாம் அச்சப்படுவதாக மட்டக்களப்பு புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.

பிள்ளையான் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்களை அவரது சக நாடாளுமன்ற உறுப்பினரான சானக்கியனும் பல்வேறு இடங்களில் பகிரங்கமாக முன்வைத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பிள்ளையான் மட்டக்களப்பில் விடுத்து வருகின்ற மிரட்டல்களை உரிய நேரத்தில் சிறிலங்கா ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்போவதாகவும், அதற்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் உதவிகளைக் கோரி வருவதாகவும் மட்டக்களப்பு புத்திஜீவிகள் தெரிவிக்கின்றார்கள்.