போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் மிதிகம ருவன் என்ற ருவன் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்களை மேலும் உறுதிப்படுத்த சந்தேகநபரை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என்று பொலிஸார், நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, சிறையில் உள்ள சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார், நீதிமன்றத்தை கோரினர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி சிறையில் உள்ள சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதேவேளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்படி மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.