மக்கள் தேர்தலை அல்ல பொருளாதார மீட்சியையே எதிர்பார்க்கின்றனர் - தேர்தலை அரசியல்வாதிகளே எதிர்பார்க்கின்றனர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அந்தவகையில், தேர்தல் தொடர்பில் நாட்டு மக்கள் தயாராகவில்லை, அரசியல்வாதிகள் தயாராகிவிட்டார்கள் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கம் விவசாயத்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களே பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விவசாயத்துறையை ஒரே கட்டமாக மாற்றியமைக்க முயற்சித்தமையே பெரும் மக்கள் புரட்சிக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இம்முறை தவறுகள் சரி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இது இம்முறை சிறந்த விளைச்சலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதால் தீவிரமடையும் நிதி நெருக்கடியை யார் பொறுப்பேற்பது எனும் நிலையை தோற்றுவிக்கும்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் தேர்தலை எதிர்பார்க்கவில்லை, பொருளாதார பின்னடைவில் இருந்து நாடு மீள வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர், ஆனால் அரசியல் காட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.