தீவிர தாக்குதலுக்கு மத்தியில் ‘நக்பா’ தினத்தை அனுஷ்டித்த பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கை பற்றிய அச்சத்துக்கு மத்தியில் தெற்கு காசா நகரான ரபாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில் பாலஸ்தீனர்கள் நேற்று 1948 இன் ‘நக்பா’ அல்லது ‘பேரழிவு’ தினத்தை அனுஷ்டித்தனர்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சுமார் 760,000 பலஸ்தீனர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வை நினைகூறும் வகையிலேயே நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெரும்பாலான மக்கள் காசா மற்றும் மேற்குக் கரையில் அடைக்கலம் பெற்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசாவின் பல இடங்களிலும் உக்கிரம் மோதல் நீடித்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டு வரும் சூழலிலேயே நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


கடந்த மே 6ஆம் திகதி தொடக்கம் ரபாவில் இருந்து சுமார் 450,000 பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் இருந்து சுமார் 100,000 பேர் வெளியேறி இருப்பதாக ஐ.நா. நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி 2.4 மில்லியன் காசா மக்கள் தொகையில் சுமார் கால் பங்கினர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரஸ், முற்றுகை பகுதியில் உள்ள மக்களுக்கு மேலும் உதவிகள் செல்லும் வகையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.


‘காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன். ரபா கடவை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், காசா முழுவதும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் நேற்று முன்தினம் (14) எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போர் மற்றும் முற்றுகை காரணமாக காசாவில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு உதவிகள் செல்வதில் இருக்கும் கட்டுப்பாடு வடக்கு காசாவில் பஞ்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா தொடர்ந்து கூறி வருகிறது.

இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கு ரபாவை நோக்கி முன்னேறியது தொடக்கம் உதவிகள் வரும் எகிப்துடனான காசா எல்லை மூடப்பட்டிருப்பதோடு மற்றொரு எல்லைக் கடவையான கெரெம் ஷலோமும் போதிய பாதுகாப்பு இன்றி ஏற்பாட்டியல் ரீதியில் அணுகுவதற்கு சாத்தியமான சூழல் இல்லாதிருப்பதாக கடந்த திங்களன்று வெளியான ஐ.நா. அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 காசா மக்கள் கடந்த மே 9 தொடக்கம் எந்த உதவியையும் பெறவில்லை என்று போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.