நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல்

காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சி சமுக ஊடகங்களில் வெளியாகி பலரது சீற்றத்திற்கும் கண்டனத்திற்கும் ஆளானது.

ஆனால் இதனை பெரிதாக அலட்டிக்கொள்ளாத இஸ்ரேல் தரப்பு அதனை ஒரு சர்வ சாதாரண சம்பவமாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் உடனான நேர்காணலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகரான மார்க் ரெகெவ், பாலஸ்தீன மக்களின் ஆடைகளை களைவது மற்றும் அவர்களின் கண்களை கட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

"முதலில், நாங்கள் இங்கே மத்திய கிழக்கில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், வானிலை மிகவும் சூடாக இருக்கிறது" என்று ரெகேவ் சர்வசாதாரணமாக பதிலளித்துள்ளார்.

இது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுகிறதா என்று நெதன்யாகுவின் ஆலோசகரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

"இவை இஸ்ரேல் அரசால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ காணொளிகள் அல்ல" என்று ரெகேவ் கூறினார்.

இஸ்ரேலிய இராணுவத்தின் உறுப்பினர்களால் காணொளி எடுக்கப்பட்டால், அது ஜெனிவா உடன்படிக்கையின் தெளிவான மீறலாக அமையும் என்று தொகுப்பாளர் வலியுறுத்தினார்.

"சர்வதேச சட்டத்துடன் எனக்கு அந்த அளவிற்கு பரிச்சயம் இல்லை," என்று ரெகேவ் கூறினார், "நான் எனது சட்டத்துறையை சரிபார்க்க வேண்டும்." என்றார்.

கடந்த வியாழன் அன்று, இஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (KAN) காசா பகுதியில் இருந்து டசின் கணக்கான பாலஸ்தீனியர்களின் படங்கள் மற்றும் காணொளி காட்சியை வெளியிட்டது, வடக்கு காசா பகுதியில் ஒரு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய இராணுவத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீனியர்கள் தங்கள் உள்ளாடைகளுடன் தெருவில் அமர்ந்து, பல இஸ்ரேலிய வீரர்களால் சூழப்பட்ட நிலையில், தங்கள் கைகளால் தங்கள் மார்பை மறைக்க முயல்வதை காணொளி காட்டுகிறது.