வடக்கு,கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நா. பிரதீபராஜா விடுத்துள்ள அறிவிப்பில்,

மத்திய வங்காள விரிகுடாவில் நாளை(14.11) தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. (தற்போது வரை இது ஒரு காற்றுச் சுழற்சியாகவே காணப்படுகின்றது). இன்று இரவு முதல் ஈரப்பதம் நிறைந்த காற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகை தரும்.

எனவே இன்று இரவு முதல் எதிர்வரும் 18.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.

உருவாகவுள்ள தாழமுக்கத்தின் வளர்ச்சி மற்றும் அதன் நகர்வு பற்றிய விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும் என அறிவித்துள்ளார்.