தேசபந்து தென்னகோனை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு



குற்றப் புலனாய்வுத்துறையினரால்  கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்  தேசபந்து தென்னகோனை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அனைத்து காவல்துறை சாட்சிகளையும் ஒரு வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணைத் திகதியில் சாட்சியங்களின் சுருக்கத்தை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் நேற்று தேசபந்து தென்னகோன் (20) கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை கோரியிருந்தார்.

எனினும், அவரது முன்பிணை கோரிக்கை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.