பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள 1000 பாடசாலைகளை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதுமாத்திரமின்றி பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தான் முதல் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதியில் உள்ள 1000 மதராசஸ் என்ற பாடசாலைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இஸ்லாமிய மதம் குறித்து பயிற்றுவிக்கப்படும் பாடசாலைகளை இந்தியா தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
எனவே தான் உடனடியாக இந்த பாடசாலைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள பொதுமக்கள் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களும் உணவுப் பொருட்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும், போர் தொடங்கி விட்டால் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதேநேரம் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களை தாக்கி அந்த மாநிலங்களை கைப்பற்றுவோம் என முன்னாள் பங்களாதேஷ் இராணுவ அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அந்த ஏழு மாநிலங்களுக்கு கடல் வழியாக செல்ல முடியாது என்றும் அவை நிலப்பரப்பின் படி பங்களாதேஷ்க்கு சொந்தமானது என்றும் எனவே சீன உதவியுடன் அந்த ஏழு மாநிலங்களை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரது கூற்றை பங்களாதேஷ் அரசு மறுத்து உள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் பங்களாதேஷை பொருத்தவரை இந்தியாவுடன் நட்பு உறவை நாடுவதை விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளது