வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு : கென்யாவில் வெடித்த கலவரத்தால் 5 பேர் பலி



கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தலைநகர் நைரோபியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த பின்னர் வன்முறையாக உருமாறியது.

இதற்கமைய, கென்ய பாராளுமன்றத்தை நேற்று முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் சுமார் 31 பேர் காயமாடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கென்யாவிலுள்ள உரிமைக் குழுவொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

கென்யாவில் வரியை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து கென்யாவின் தலைநகர் நைரோபியின் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமியற்றுபவர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், சட்டமியற்றுபவர்கள் மசோதாவை நிறைவேற்றுவதற்கு வாக்களித்த நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.