உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அதிபர் ரணில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படுமெனவும் அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை,பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளதாகவும் நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            