சாட்சி வழங்க தயாரானார் கோட்டாபய : சூடுபிடிக்கிறது லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்



2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.



இந்த விவகாரம் தொடர்பில் செய்யப்பட்ட ஹபியஸ் கொர்ப்பஸ் வழக்கில் சாட்சியம்வழங்கத் தயாராக உள்ளதாக கோட்டாபயவின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் சட்டப்பூர்வமாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ரோமேஷ் டி சில்வா இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்தில் சாட்சி அளிக்க முடியாது என்றும், ஆனால் கொழும்பில் உள்ள நீதிமன்றமொன்றில் சாட்சி அளிக்க தயார் என கோட்டாபய கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, யசந்த கொடாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உச்சநீதிமன்ற குழு, சாட்சி அளிக்கும் கோரிக்கையை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நான்கு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

  இது தொடர்பான வழக்கானது, காணாமல் போன இரண்டு மனித உரிமை ஆர்வலர்களினதும் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  


மேலும் கோட்டாபய ராஜபக்ஷ சாட்சி அளிக்கத் தயாராக இருப்பதால், வழக்கை முடிக்க வேண்டும் எனவும் அவரது தரப்பில் வாதம் வழங்கப்பட்டது.


இதற்கு, காணாமல் போனவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நுவன் போபகே அவரும் உடன்பாடு தெரிவித்துள்ளார்.


இதன் அடிப்படையில், வழக்கு விசாரணையை முடிக்க நீதிமன்றம் தீர்மானித்தது. இந்த வழக்கு 2011 டிசம்பர் 9 ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


இருவரது காணாமற்போன வழக்கில் 2019இல், கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் பாதுகாப்பு காரணங்களால் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது எனக் கூறி, அவர் அந்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.


மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த அறிவுறுத்தலை இரத்துச் செய்து அவரை சாட்சியாக அழைக்கும் உத்தரவை இடைநிறுத்திய நிலையில், இந்த தீர்ப்பை நீக்குவதற்காகவே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.