இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கலன் வாகன சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள,
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் கொள்கலன் வாகன சாரதிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை சுகாதார வசதிகள் இன்மை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சாரதிகள் எதிர்கொள்வதாக தெரிவித்த அவர், இந்த காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் நிவர்த்தி செய்யாவிட்டால் தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கையானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டையும் பாதிக்கும்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சுங்கத் துறைக்கு கூடுதலாக, தொடர்புடைய பிற அரசு நிறுவனங்களும் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய அவர், பிரச்சினையைத் தீர்க்க பாதுகாப்புப் படை வீரர்களை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அரசு ஈடுபடுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இதேநேரம் சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் அதிகூடிய விலைக்கு வாங்குவதற்குத் தேங்காய்கள் இல்லை.
எனவே இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.