கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! - மக்கள் கடும் எதிர்ப்பு

 


யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்படவிருந்த காணி அபகரிக்கு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் முயற்சியில், அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை வருகை தந்திருந்தனர்.

 இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் சட்டத்தரணி சுகாஷ ஆகியோர் ஊர் மக்களுடன் இணைந்து காணி சுபீகாரிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 இதையடுத்து, திணைக்கள அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் மக்கள் ஈடுபட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.

 தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் ஜேஃ226 மற்றும் காங்கேசன்துறை ஜேஃ233 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 29 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் இந்த அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.