யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை...!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(18)  நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்ட விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டி போட்டு சாரதித்துவம் செய்யும் அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் செல்லும் மக்கள் அதிக அசௌகரியங்களை சந்தித்து வருவதால் அது குறித்து குறித்த தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைய காலமாக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தரப்பினரால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக பல மரணங்களும்  பல்வேறு உடல் பாதிப்புகளும் சொத்து இழப்புக்களும் மற்றும் உடமைகள் சேதங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மக்களுக்கு இடையூறாக செயற்படும் சாரதிகள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதை வீதி போக்குவரத்தை கண்காணிக்கும் அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயற்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.