ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதி போர்க்களத்தில் காயமடைந்த இரண்டு வட கொரிய வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தெரிவித்தார்.
இந்த இருவரும் "தேவையான மருத்துவ உதவியை" பெற்று வருகின்றனர், மேலும் கியேவில் உள்ள உக்ரேன் பாதுகாப்பு சேவையின் காவலில் உள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
வட கொரியர்களைக் கைப்பற்றியதற்காக உக்ரேனிய சிறப்பு நடவடிக்கைப் படைகளின் வீரர்களுக்கு "நன்றி" தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறினார்.
இதேநேரம் போரில் காயமடைந்த வடகொரிய வீரர்களை ஆதாரமற்ற வகையில் ரஸ்ய இராணுவம் கொலை செய்யும் எனவும் உக்ரேன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உக்ரைனிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், கைதிகள் ஜனவரி 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், அதற்குப் பிறகு உடனடியாக "ஜெனீவா மாநாட்டின்படி தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு" கியேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியது.
கைதிகளுக்கு உக்ரேனிய அல்லது ரஷ்ய மொழி பேசத் தெரியாது என்றும், "எனவே அவர்களுடன் கொரிய மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தொடர்பு கொள்ளப்படுகின்றது என்றும் அவர்களிடம் பத்திரிகையாளர்களை அணுக அனுமதிக்குமாறு உக்ரைன் பாதுகாப்பு சேவைக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
"என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் "உக்ரேனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக அல்ல, பயிற்சிக்காக ரஷ்யா சென்றதாக பிடிபட்ட வடகொரிய வீரர் தெரிவித்துள்ளார். தான் 2005 இல் பிறந்ததாகவும், 2021 முதல் வட கொரியாவில் துப்பாக்கி வீரராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது