இந்தியாவின் மராட்டிய மாநில சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தப் பேரணியில் பங்கேற்ற அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர். சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.
அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனர் ரமேஷ் கூறும் போது இந்தப் பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால் ஆண், பெண்கள் விகிதாசாரம் மாறுபட்டு இருப்பதால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
மராட்டிய மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் பெண் சிசுவதைதான். பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            