நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-பலி எண்ணிக்கை 109ஆக உயர்வு!

தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்த சம்பவம் பேரழிவு மற்றும் தேசிய பேரழிவு என்றும் ஜனாதிபதி முஹம்மது புஹாரி விபரித்தார்.ஜனாதிபதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.பல உயிர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர்.ஆலை பெரும் தீயில் சிக்கியபோது டசன் கணக்கான மக்கள் சுத்திகரிப்பு ஆலைகளில் வேலை செய்து கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.நைஜீரியா ஆபிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அதன் எண்ணெய் உற்பத்தி திறன், எண்ணெய் சேமிப்பு ஆகியன சட்டவிரோத சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டின் காரணமாக முடங்கியுள்ளது.எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டாவின் சில பகுதிகளில் சட்டவிரோத சுத்திகரிப்பு தற்போது அதிகமாகியுள்ளது.2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பெப்ரவரி 2022ஆம் ஆண்டுக்கு இடையில் நைஜீரியா குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இழந்துள்ளது.