காஸாவின் பதற்றத்தை குறைக்கும் நோக்கோடு போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உள்ள மத்தியஸ்தர்கள் புதிய திட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்துடனான காசாவின் எல்லையில் உள்ள பிலடெல்பி நடைபாதை மற்றும் நெட்ஸாரிம் பிரதேசங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ள நிலையில் இந்த திட்டம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலடெல்பி நடைபாதை மற்றும் நெட்ஸாரிம் ஆகிய பிரதேசங்கள் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பெஞ்சமின் நெதன்யாகு கூறிய நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என கூறப்படுகிறது.
காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கோருகிறது.
அதே நேரத்தில் நெதன்யாகு இஸ்ரேல் தாழ்வாரங்களின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் மத்தியஸ்தர்களுக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலுக்கும் ஹமாஸ{க்கும் இடையில் பெரும் இடைவெளிகள் இருப்பதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது அர்த்தப்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி இஸ்ரேல் இராணுவம், மொசாட் புலனாய்வு அமைப்பு மற்றும் ஷின் பெட் பாதுகாப்பு சேவையின் அதிகாரிகளை நேற்று கட்டாருக்கு போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியுள்ளது.
காஸாவின் பிலடெல்பி மற்றும் நெட்ஸாரிம் தாழ்வாரங்களின் நிலை குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இஸ்ரேலின் அரசாங்கம் தொடர்ச்சியான பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறது என குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.