புதிய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பம் : இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி என குற்றச்சாட்டு


காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சூழலிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கச் செய்யும் என்று ஹமாஸ் அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் டாஹாவில் நேற்று ஆரம்பமான புதிய சுற்று பேச்சுவார்த்தையில் எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுப் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கூடிய விரைவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே கருத்தொருமையை பெறுவதற்கு உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான எகிப்து பாதுகாப்பு தூதுக்குழு டோஹா சென்றிருப்பதாக அல் கஹ்ரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பல விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும் பேச்சுவார்த்தைகள் இன்று கெய்ரோவுக்கு திரும்பவிருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய உளவுப் பிரிவுத் தலைவர் டேவிட் பர்னீயும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். எனினும் இது தொடர்பில் பதில் அளிக்க இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க மத்திய உளவுப் பிரிவு தலைவர் வில்லியம் பர்ன்ஸ், டோஹா சென்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

ஒரு வருடத்தை நெருங்கும் காசா போரில் எகிப்து மற்றும் கட்டார் தொடர்ந்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. போர் நிறுத்த திட்டத்தில் ஹமாஸ் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டில் சில சமரசங்களைச் செய்துகொள்ள முன்வந்தது.

எனினும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டாலும் ஹமாஸை ஒழிக்கும் போரின் இலக்கு நிறைவேறும் வரை போரை தொடர்வதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு உறுதியாக உள்ளார்.

காசா நகரில் புதிய போர் நடவடிக்கையை மேற்கொண்டது உட்பட நெதன்யாகு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மேலும் இடையூறுகளைச் செய்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.