புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்..! 6 பேர் உயிரிழப்பு - 23 பேர் மாயம்


தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக புயலில் சிக்கியுள்ளது.

இதனால் கப்பலுக்குள் நீர் புகுந்து HTMS Sukhothai என்ற அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், 3 போர்க்கப்பல்கள், இரண்டு உலங்குவானூர்திகள் என்பன இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டன.

குறித்த கப்பலில் மொத்தம் 106 மாலுமிகள் பயணித்த நிலையில், 75 மாலுமிகள் மட்டுமே முதற்கட்டமாக மீட்கப்பட்டனர்.

அதன் பின்னர் 30 மாலுமிகள் மயமானதாக கடற்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் சிறிது நேர தேடுதலின் பின் மாலுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் துரிதமாக செய்யப்பட்டபோது ஆறு மாலுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் காணாமல் போன 23 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.