காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை, எதிர்பாராத விதமாக துப்பாக்கி இயங்கியதால் என கடற்படை இன்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த விடயம் தெரியவந்ததாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட தெரிவித்தார்.
இதற்கிடையில், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் குழுவொன்று சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படை குழுவினர் கடந்த 27 ஆம் திகதி இரவு அவர்களை கைது செய்தனர்.
இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாதென்றும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அது இந்திய படகாக இருந்தாலும் சரி வேறு எந்த நாட்டின் படகாக இருந்தாலும், சரி கட்டாயம் கண்காணிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.