இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! விசாரணைகளில் வெளியான தகவல்

நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து, பேரூந்து சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேரூந்து சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேரூந்தின் தடையாளியில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நானுஓயா பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிந்தவர்கள், ஹட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தின் ஐவரும், ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நானுஓயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 13 வயதுடைய சிறுவனும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், 26 மற்றும் 27 வயதுடைய மூன்று ஆண்களும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களும் அடங்கியுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று டிக்கோயா பகுதியில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்றுடன் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் மோதிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தின் போது, ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான பாதையில் பயணித்த பேருந்து, குறித்த பாதையில் மேல் நோக்கி பயணித்த சிற்றூர்ந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அத்துடன், சிற்றூர்திக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது