சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட நாமல்: அநுர அரசு மீது எழுந்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியன் செயலாளர் சாகர காரியவம்சம் (Sagara Kariyawasam) இதனை தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேளையில் இவ்வாறு செயற்படுவது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கலைக் காட்டுவதாகவும் இவ்வாறு நடக்காமல் தடுக்க வேண்டியது, ஜே.வி.பியுடன் நேரடியாக தொடர்பில்லாத தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கடமை என்றும் சாகர காரியவம்சம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உகண்டா, சீஷெல்ஸ், டுபாய் போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளால் திருடப்பட்ட பணம் இருப்பதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுர குமார கூறினார்.

அவற்றைக் கொண்டுவந்தால் உலகக் கடன்கள் நீங்கிமக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக அமையும் என்றும் அவர் கூறினார், எனவே அரசாங்கம் தயவு செய்து அதை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மற்றபடி நாமல் ராஜபக்சவை அநாமதேய முறைப்பாடுகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்த முயற்சிப்பதோ, பதிவு செய்யப்படாத வாகனத்தை வைத்து அற்ப அரசியல் செய்வதோ அரசாங்கத்தின் பொறுப்பல்ல, எனவே தயவு செய்து நாடுகளில் இருப்பதாக கூறப்படும் பணத்தை கொண்டு வாருங்கள்.