நாமலின் சர்ச்சைக்குரிய வழக்கு: திடீரென அடுத்தடுத்து விலகிய நீதிபதிகள்!


சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட  நீதிபதிகள் இன்று திடீரென அடுத்தடுத்து விலகியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தார்.

சனத் பாலசூரிய மற்றும் போத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, தான் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நீதிபதியை நியமிக்க, வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் பரிந்துரைக்கப்படும் என்று நீதிபதி மஞ்சுள திலகரத்ன கூறினார்.

 
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவிடம்  பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வழக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு பொருத்தமான நீதிபதியை நியமிக்க, மே 21 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 கிரிஷ் கொடுக்கல் - வாங்கல் ஊடாக 70 மில்லியன் ரூபாவை குற்றவியல் முறைகேடு செய்ததாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.