நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தடை - சிக்கிய 35 கடைகள்!

நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்ததன் காரணமாக இவ்வாறு நேற்றையதினம் குறித்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லூர் மகோற்சவ காலங்களில் ஆலய சூழலில், கச்சான் கடைகள், இனிப்பு கடைகள், காரம் சுண்டல் கடைகள் என பெருமளவான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனைகள் அதிகளவில் காணப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சோதனை நடவடிக்கையில் இறங்கிய மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு இனிவரும் நாட்களிலும் இவ்வாறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.