மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு காழ்ப்புணர்ச்சியை காட்டும் பிள்ளையான்

மயிலத்தமடு பண்ணையாளர்கள் விடயத்தில் பிள்ளையான் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடுவில் காவல்துறையினர் காவலரன் அமைத்தால் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) தீர்மானம் ஒன்றை எடுத்து இருந்தார்.

இதற்கு பல எதிர்ப்புகள் வந்திருந்தபோதிலும் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மயிலத்தமடு பகுதியில் காவல்துறை காவலரன் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது அத்துமீறிய பயிற்செய்கையாளர்களுக்கு ஆதரவாக அங்குள்ள காவல்துறை காவலரன் செயற்படுவதாகவும் கால காலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திய இடங்களில் கால்நடைகளை மேய்க்கவிடாமல் தடுத்துள்ளனர்.

கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறிய குடியேற்றவாசிகள் விவசாயம் செய்ய ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

காவல்துறை காவலரன் ஒன்று அமைத்தால் அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்ற எண்ணத்தில் பிள்ளையான் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டாரா என்ற கேள்வி தற்போது பண்ணையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

மேய்ச்சல் தரை விடயம் தொடர்பாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்த பிள்ளையான் இலங்கை பேரினவாத அரசாங்கத்துடன் ஒன்று இணைந்து தமிழர்களது பூர்வீக காணிகளையும் கால்நடைகள் நிலங்களையும் பண்ணையாளர்களது வாழ்வாதாரத்திலும் பண்ணையாளர்களுக்காக அமைக்கப்பட்ட காவல்துறை காவலரன் இன்று பண்ணையாளருக்கு எதிராக மாறி நிற்கும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

வழமை போன்று பிள்ளையான் தனது இரட்டை முகத்தை பண்ணையாளர்கள் விடயத்திலும் காட்டி உள்ளார் என்று பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.