மியன்மார் நிலஅதிர்வு - 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் கடந்த 28ஆம் திகதி 7.7 மெக்னிடியூட் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவாகியது.

இந்த நிலஅதிர்வினைத் தொடர்ந்து பல்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன.

சேதமடைந்த கட்டிடமொன்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 63 வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் ஒருவரை, மீட்புக் குழுவினர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மியன்மார் நில அதிர்வில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,700 ஆக உயர்வடைந்துள்ளது.

இதில் 50 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
 
 அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சரவதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.