விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா


தமிழினத்தினதும், தமிழ் தேசிய வரலாற்றினதும் துரோகி என தன்னை அழைப்பது முற்றிலும் தவறான கருத்து எனவும், விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர தான் எடுத்த முடிவு சரியானது என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

''தமிழினத்தின் துரோகி என தன்னை புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அழைப்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான் தான் அழித்தேன், நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

குறித்த காலப்பகுதியில் ஒருமுறை மாத்திரமே போர் இடம்பெறும் களமுனைக்கு சென்றிருந்தேன். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மரணம் தொடர்பாக என்னை அடையாளப்படுத்தவே அனுப்பியிருந்தனர்.

ஆனால் மக்களின் கருத்தானது மிகவும் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது'' என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, பிளவுபடுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும், அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை காட்டிக்கொடுத்தவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருத்தும் தமிழர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தமிழினத்தின் உரிமைக்காக போராடிய தமிழ் இனத்தையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரையும் இலங்கை அரசிடம் காட்டிக்கொடுத்தவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும்  முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.