ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சிரமதான பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் பருவமழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதோடு வடிகான்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்களுக்குள் செல்வது மாத்திரமின்றி நீர்தேங்கி நின்று நோய்கள் ஏற்ப்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் பாரிய சிரமதான பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணியின் வழிகாட்டலில் பாரிய சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று (22) ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இந்துபுரம், திருமுறிகண்டி, மாங்குளம், அம்பகாமம், ஒட்டுசுட்டான், காதலியார் சமணங்குளம், பழம்பாசி, ஒதியமலை புளியங்குளம், பேராறு போன்ற கிராமங்களில் கிராம அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் மேற்ப்பார்வையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்போது, கிராம அமைப்புக்கள் கிராம மக்கள் பிரதேச சபையினரின் ஒத்துழைப்புடன் கிராமங்களில் உள்ள பொது மண்டபங்கள் முன்பள்ளிகள் போன்ற பொது இடங்களில் சிரமதான பணிகளை முன்னெடுத்ததோடு கிராமங்களில் உள்ள நீர் வடிந்தோடும் வடிகால்கள் மக்களால் துப்பரவு செய்யப்பட்டது.

ஏனைய கிராமங்களில் தொடர்ந்து வரும் நாட்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.