நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இது தொடர்பான உத்தரவை சிறிலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தாம் பதவி விலகுவதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா கடந்த 23 ஆம் திகதி சிறிலங்கா நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து, அவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் அரசியல் தரப்பினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான முழுமையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியிருந்தது.

இந்த நிலையில், அவரது பதவி விலகலுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.