மலையக எழுச்சி பயணம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு : பலர் உணர்வுபூர்வமாக பங்கெடுப்பு


தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயனத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரை வெற்றிகரமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று(29) காலை தலைமன்னார் புனித லோரன்ஸ் ஆலயத்தில் இருந்து நடைபவனி ஆரம்பமாகி18 கிலோ மீற்றர் தூரம் நடைபயணமாக புறப்பட்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தை வந்தடைந்தது.

மலையகம் 200 நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(28)  மாலை 5 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது.

 தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறியமையை நினைவு கூரும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது தலைமன்னார் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மலையக மக்கள் இலங்கையில் கால் பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நினைவுத்தூபியை சர்வமத தலைவர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி திறந்து வைத்ததுடன், பொதுமக்கள் மலர் தூவி நினைவேந்தலை மேற்கொண்டு அங்கிருந்து ஊர்வலமாக தலைமன்னார் புனித லோறன்சியா ஆலயத்தை சென்றடைந்து அங்கு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.

 மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ இடம்பெறுகின்றது.

16 நாட்கள் தொடரும் இந்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை சென்றடைய உள்ளது.