சூட்கேசிற்குள் பெண்ணின் சடலத்தை வைத்து ஆற்றில் வீச முயன்ற தாயும், மகளும் கைது

சூட்கேசில் கொண்டுவந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மற்றும் மகளை கொல்கொத்தா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவின் குமர்துலி பகுதியில் உள்ள கங்கை நதிக்கரையில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள் இழுக்க முடியாத பாரத்துடனான ஒரு சூட்கேசுடன் வந்துள்ளனர்.

இதையடுத்து யோகா பயிற்சிக்கு வந்த ஒருவர், 'சூட்கேசில் என்ன இருக்கிறதுஅதை ஏன் ஆற்றில் வீச செல்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்கள், 'எங்கள் செல்ல நாய் இறந்து விட்டது. அதை ஆற்றில் வீச வந்தோம்' என, தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டு அவர்களை மாறி மாறி கேள்வி கேட்டதால் வேறு வழியின்றி, சூட்கேசில் இருப்பது தனது அண்ணியின் சடலம் என்றும், அவர் தற்கொலை செய்ததால் சடலத்தை ஆற்றில் வீச கொண்டு வந்ததாகவும் குறித்த பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் குறித்த இரண்டு பெண்களிடமும், பொலிஸார் நடத்திய விசாரணையில், இருவரும் கொல்கத்தா அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்தோடு சூட்கேசில் சடலமாக இருந்த பெண், அவர்களது உறவினர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.