செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம்.. : பயங்கரவாதிகள் கொடூரச் செயல்"

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை  செம்மணி மனிதபுதைகுழி  இவ்வுலகிற்கு  அம்பலப்படுத்தி விட்டது என்று தென்னிந்திய பிரபல இயக்குநரும்  தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவுனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

 
செம்மணி மனிதபுதைகுழி தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று வரையான (30) அகழ்வுகளின்போது 35 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பல எலும்புக்கூடுகள் கொடூர கொலை இடம்பெற்றதை ஆதாரப்படுத்துகின்றது.

அதாவது தாய் ஒருவர் சேயை அணைத்தவாறு ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சிறுவன் ஒருவனது எலும்புக்கூடானது புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களானது கடந்தகால அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.

குறித்த பகுதியானது யுத்த காலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே காணப்பட்டது. ஆகையால் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரை மீறி எவரும் உள்ளே செல்ல முடியாது. ஆகையால் இந்த கொடூர கொலைகளை இலங்கை இராணுவமே மேற்கொண்டிருக்கும் என்ற கருத்தில் ஐயம் இல்லை.

இதுவரை 33 எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் 600க்கு  மேற்பட்டோரது எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 33 எலும்புக்கூடுகளிலேயே இத்தனை கொடூரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள எலும்புக்கூடுகளில் இன்னமும் எத்தனையெத்தனை குரூரங்கள் இருக்குமோ என நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைத்து.

யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலர் தமது பிள்ளைகளுக்கு அல்லது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே வயது மூப்பினாலும் பல்வேறு காரணங்களாலும் உயிரிழந்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று விடயத்தையாவது ஏனைய உறவுகள் தமது வாழ்க்கை காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏன் இந்த விடயங்களை அம்பலப்படுத்தவில்லை? இதிலேயே தெரிகிறது அவர்களது இனவாத முகம்.

என்னதான் மூடி மூடி மறைத்தாலும் உண்மைகள் எப்போதும் உறங்காது என்பதற்கு செம்மணிப் புதைகுழி ஒரு மிகச் சிறந்த உதாரணம். கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தற்போதை அநுர அரசு தண்டிக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த செம்மணி புதைகுழி விவகாரத்தில் அவர்களும் இனவாத கொள்கையில் செயற்படுகின்றார்களா? அல்லது அனைத்து இனங்களையும் சமமாக வழி நடத்துகின்றார்களா என்ற விடயம் இனிவரும் அவர்களது செயற்பாட்டில் உறுதியாக தெரியவரும்.

பாதிக்கப்பட்ட எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு நீதி கிடைக்கும் காலம் கனிந்து வருகிறது என எனக்கு தோன்றுகிறது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சர்வதேச சமூகங்களும், புலம்பெயர் உறவுகளும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஓரணியில் நின்று இலங்கை அரசாங்கத்தின் மீது ஆக்கப்பூர்வமான அழுத்தங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைப்பதற்கு தொப்புள் கொடி உறவுகளாக நாம் எப்போதும் இறுக கைப்பற்றி தோளோடு தோள் நிற்போம். அறம் வெல்லும்.- என்றார்.