துருக்கி பேரனர்த்தம் - பலி எண்ணிக்கை 1,300 ஐ தாண்டியது!

துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

அத்துடன், சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 467 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

1939 ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இது என்று கூறிய ஜனாதிபதி ஏர்டோகன், இதன் விளைவாக 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறினார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தற்போது, கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களைத் தேடி தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது எகிப்தின் கெய்ரோ, சைப்ரஸ் மற்றும் லெபனான் போன்ற தொலை தூர பகுதிகளில் உணரப்பட்டது.

6.6 மெக்னிடியூட் அளவில் குறைந்தது 20 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ் மற்றும் யுக்ரைன் உட்பட பல நாடுகள் உடனடியாக உதவிகளை வழங்கிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


முந்தைய செய்தி------------------


சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு (01:17 GMT) காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கி.மீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 284 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே தெரிவித்தார்.

அத்துனட. சிரியாவில் 230க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் மக்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Turkey earthquake

எதிர்வரும் சில மணிநேரங்களில் பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் பெரும் இடிபாடுகளின் கீழ் மீட்புப் பணிகள் இடம்பெறுகின்றன.

தமது நாட்டில் 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் 2,323 பேரும், சிரியாவில் 639 பேரும் காயமடைந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.