உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா. கவலை


கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிலிப் லாஸரினி என்ற ஐ.நா. பிரதிநிதி பகிர்ந்த பதிவில்,
 
“காசாவில் கடந்த 4 மாதங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல்வேறு மோதல்களில் உயிரிழந்த ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகம்.
 
கடந்த 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் நடந்த பல்வேறு மோதல்களில் 12,193 குழந்தைகள் இறந்தனர். ஆனால், காசாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 12,300-க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர்.


இந்தப் போர் குழந்தைகளின் மீதான போர்.  அவர்களின் எதிர்காலத்தின் மீதான போர். இந்தப் போர் தொடங்கி 3 வாரங்களிலேயே 3600 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டுவிட்டனர். காசாவில் பெற்றோராக இருப்பது ஒரு பெரும் சாபம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அப்பகுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,160 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர் கடத்திச் செல்லப்பட்டனர்.

 இந்நிலையில் 120 பேர் விடுதலையாகினர். 32 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எஞ்சியவர்களை மீட்க தொடர்ந்து இஸ்ரேலியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை.

காசாவில் ரமலான் மாதம் போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. ரமலான் தொடங்கியும் கூட போரின் வன்முறையும், கொடூரமும் நிற்கவில்லை, குறையவில்லை. கடந்த ரமலான்களின் நினைவுகள் எங்களை அரவணைக்கின்றன என்று காசாவாசிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
 ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் வடக்கு காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமான நிலையில் உள்ளனர்.