தமிழர் விவகாரம் குறித்து மோடியின் கருத்து : தமிழ் எம்.பி.க்களின் நிலைப்பாடு வெளியானது

அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் , இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று  தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது.

இதன்போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி, தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்து தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவித்த தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்,

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துதல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் இவ்விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்தியப்பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால் அதனை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல் தொடர்பில் திருப்தியடைவதாக கூற முடியாது என்றும், மாறாக அவர் தனது கடமையை தான் செய்திருக்கின்றார் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.