ஐரோப்பாவை உலுக்கிய ஏவுகணை தாக்குதல்..! நேட்டோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

போலந்தில் விழுந்ததாக கூறப்படும் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமானவையே என்றும் துரதிர்ஷ்டவசமாக விழுந்துள்ளன என்றும் நேட்டோ கூறியுள்ளது.

போலந்தில் ஏவுகணைகள் தாக்கியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை நடத்தியது ரஷ்யா தான் என குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நேட்டோ விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் பகுப்பாய்வு செய்ததில், உக்ரேனிய ஏவுகணைகள் தான் போலந்தில் விழுந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இது திட்டமிட்ட தாக்குதலுக்கான அறிகுறி ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இது உக்ரைனின் தவறு அல்ல. உக்ரைனுக்கு எதிராக சட்டவிரோத போரை தொடர்வதால், ரஷ்யா இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

அதாவது, ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அனுப்பிய ஏவுகணைகள் தவறுதலாக போலந்தில் விழுந்திருக்க வேண்டும் என்று நேட்டோ கூறியுள்ளது .

இதற்கிடையில், ரஷ்யாவுடனான தனது எல்லையில் போலந்து முட்கம்பிகளை நிறுவியுள்ளது.

போலந்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே 8 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளது.

சிலினி கிராமத்திற்கு அருகே ராணுவ வீரர்கள் ரேஸர் கம்பியை வேலிக்காக எடுத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பு நாடுகளும் கிழக்கில் தங்கள் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.