கனடாவுக்கு அதிரடி தடை விதித்த மெட்டா நிறுவனம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின்  தாய் நிறுவனமான மெட்டா ” கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்” என அறிவித்துள்ளது.டிஜிட்டல் செய்திகளின் வருகையால் கனடாவில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால்  பலர் வேலையை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு மசோதாவை அண்மையில்  நிறைவேற்றியுள்ளது.இதன்படி, கனடா  பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள்  போன்ற டிஜிட்டல் துறையின்  ஜாம்பவான்கள் தங்களது நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். அத்துடன் டிஜிட்டல் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடாவுடன் வணிக ஒப்பந்தங்கள் பலவற்றை இத்தளங்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருந்தது .

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின்  பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.

அத்துடன் இவ்வாரம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை, கனடாவின் அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், புதிய சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, ‘பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்’ இருப்பதாகவும் கூறிய அவர், “இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது” என்றும் தெரிவித்திருந்தார். கூகுள் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில், தனது பிரபலமான தேடுபொறியில் கனடா நாட்டு பயனர்களுக்கு செய்திகளுக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்தியது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் கூறும்போது, “யாரும் விரும்பாத ஒரு முடிவைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவே முயல்கிறோம்” என கூறினார்.”

ஒன்லைன் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பயன்படுத்தும் போது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வெளியே செல்தாக அவுஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளும் இதே போல் சட்டங்கள் கொண்டு வருமா என டிஜிட்டல் ஆர்வலர்கள் விவாதிக்கின்றனர்.