அமெரிக்காவின் கருப்புப் பட்டியலுக்குள் சிக்கவுள்ள மேலும் பல சிறிலங்கா அதிகாரிகள்!


சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள நிலையில் மேலும் பலரும் அவதானிக்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தடை தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளார் ஒருவர் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கான பொறுப்புக்கூறலையும் மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

பாதுகாப்பு சீர்திருத்தத்தை ஊக்குவித்தல் உட்பட நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுகிறது.

ஆகவே இந்த நடவடிக்கைகள் காரணமாக சிறிலங்காவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அதுமட்டுமன்றி, இது உலகளவில் அமெரிக்க தூதரகத்தால் மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான செயற்பாடுகளே. 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா அதிகாரிகள் தொடர்பிலும் கொழும்பில் உள்ள தூதரகம், மற்றும் வெளிவிவகாரத் திணைக்களம் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மீளாய்வு செய்து வருகின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.