மன்னம்பிட்டி விபத்து! 'இப்படி தான் நடந்தது' - பேருந்தில் பயணித்தவரின் திகில் அனுபவம்


பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 43 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கதுருவெலயில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து கொட்டலிய ஆற்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து! 11 பேர் பலி - காரணத்தை வெளியிட்ட காவல்துறை

"கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து பயணிக்கவிருந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். சுமார் பத்து பேர் நின்றிருந்தனர்.

7.30 மணியளவில் பேருந்து புறப்பட்டது. மின்னல் வேகத்தில் பயணித்தது. பாலத்தை நெருங்கும் போது திடீரென நின்ற பேருந்து பின்னர் ஆற்றில் விழுந்தது.

நான் ஜன்னல் ஓரத்தில் இருந்தேன். நான்தான் முதலில் வெளியே வந்தேன். பலர் மயக்கமடைந்திருந்தனர்.

5 முதல் 10 நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்” எனக் கூறியுள்ளார். 

இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகமாக பேருந்து பயணித்ததில் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முன்னர் ஆபத்தான வாகனம் செலுத்தியமைக்காக, குறித்த பேருந்து சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறும் போது சாரதி மதுபோதையில் இருக்கவில்லை எனவும், அவர் வேறு ஏதேனும் போதைப்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.