யாழில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா கடற்படை - பாரிய போராட்டத்திற்கு தயார் நிலை

 யாழ்ப்பாணம் - மண்டைதீவு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் மண்டைதீவு கிழக்கு J/07 உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலுசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளன.

இதற்கான அளவீட்டு பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்த, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களை முன்வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் அனைத்துத் தரப்பினரையும் காலை 7.30 க்கு மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.